இளம் சிந்தனையாளர்களின் கனவுகள் மற்றும் சிந்தனைகள் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் அமானா வங்கியினால் அண்மையில் “எனது எதிர்காலம், எனது கனவு” எனும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்ட அகில இலங்கை கட்டுரைப் போட்டியின் விருதுகள் வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) அண்மையில் நடைபெற்றது. இலங்கை நிலைபேறான அபிவிருத்தி சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் சமிந்திரி சப்ரமாது மற்றும் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் ஆகியோர் சிறப்பு பேச்சாளராக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வளர்ச்சியை செயற்படுத்துவது மற்றும் வாழ்வுக்கு வளமூட்டுவது எனும் வங்கியின் நோக்கத்துக்கமைய, ஆக்கத்திறன், சிந்தனை வெளிப்பாடு மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை வெளிக்கொண்டு வரும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போட்டி கனவுகளுக்கு வலுவூட்டும் சக்தியாக அமைந்திருப்பதுடன், இளம் சிந்தனையாளர்களை வலிமைப்படுத்துவது மற்றும் முன்னால் காணப்படும் எல்லைகளற்ற வாய்ப்புகளை செயற்படுத்துவதாக அமைந்துள்ளது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 1ஆம் இடம், 2ஆம் இடம் மற்றும் மெரிட் விருதுகள் வெவ்வேறாக வழங்கப்பட்டிருந்தது. மொத்தமாக 42 வெற்றியாளர்கள் தமது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் போன்றோர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். போட்டியில் 3,500க்கும் அதிகமான கட்டுரைகள் நாடு முழுவதிலுமிருந்து சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. போட்டிக்கு கிடைத்திருந்த பல்வகையான ஆக்கங்களினூடாக இன்றைய இளைஞர்களின் கனவுகளை வெளிப்படுத்த முடிந்திருந்தது.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிட வெற்றியாளர்கள் ரூ. 50,000 பணப் பரிசை பெற்றுக் கொண்டதுடன், இரண்டாமிட வெற்றியாளர்கள் ரூ. 30,000 பெற்றுக் கொண்டனர். மேலும் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த ஐந்து கட்டுரைகளுக்கு தலா ரூ. 10,000 வீதம் வழங்கப்பட்டது. இளைஞர்கள் காண்பித்திருந்த திறமைகளை வெளிப்படுத்தியிருந்தது.
போட்டியின் இலக்கு தொடர்பில் அமானா வங்கியின் விற்பனை வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் சித்தீக் அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த போட்டியினூடாக இளம் சிந்தனையாளர்களை பெரும் கனவு காணச் செய்யவும், புத்தாக்கமாக சிந்திக்கவும், சமூகத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பரந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தவும் ஊக்குவிக்கின்றோம். அவர்களின் கனவுகளை கடதாசியில் பதிவிடச் செய்வது என்பது, அவர்களின் கனவுகளை நனவாக்கச் செய்வதன் முதல் படியாக அமைந்துள்ளது.” என்றார்.
இலங்கை நிலைபேறான அபிவிருத்தி சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் சமிந்திரி சப்ரமாது நிகழ்வில் உரையாற்றும் போது, எதிர்கால கனவுகளை பேணுவதில் நிலைபேறாண்மையை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை பகிர்ந்திருந்தார். தமது விளக்கத்தின் போது, 17 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (UNSDG) பற்றிய விளக்கங்களை இளைஞர்கள் மத்தியில் வழங்கியிருந்தார். மக்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தல், இயற்கை வளங்களை பொறுப்பு வாய்ந்த நுகர்வுக்கான சூழலை உறுதி செய்தல் மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் போன்றன தொடர்பாக அவர் விளக்கமளித்திருந்தார். நாளாந்த வாழ்க்கையில் நிலைபேறான செயன்முறைகளை எவ்வாறு பின்பற்றுவது என்பது தொடர்பில் விளக்கமளித்ததுடன், தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் சென்று செயலாற்றுவது பற்றியும் சிந்திக்கத் தூண்டுவதாக அவரின் விளக்கம் அமைந்திருந்தது.
இந்த வெற்றிகரமான செயற்பாடு தொடர்பில் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “எதிர்காலத்தை பேணும் வகையில் சொற்களின் வலிமை, எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகளை நாம் கொண்டாடியிருந்தோம். “எனது எதிர்காலம், எனது கனவு” எனும் தொனிப்பொருளில், முன்னெடுக்கப்பட்ட இந்த போட்டியினூடாக, சமூகம் எனும் வகையில் நாம் அவ்வாறான நம்பிக்கையை ஒவ்வொருவர் மத்தியிலும் ஊக்குவிக்கின்றோம், அவர்களின் கனவுகளை வழிநடத்துவதற்கு உதவுவது போன்றன மேற்கொள்ளப்பட்டிருந்தன. சவால்கள் மற்றும் வாய்ப்புகள் இணைந்து, தொடர்ச்சியாக மேம்பட்டு வரும் உலகில், உங்கள் கனவுகள் முக்கியத்துவம் பெறுவதுடன், எதிர்காலத்தை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வழிநடத்துவதாக அமைந்துள்ளது. இன்றைய தினம் வெற்றியாளர்களை வாழ்த்துவதுடன், 3500க்கும் அதிகமான இளைஞர்களை அவர்களின் கனவுகளை நோக்கி நகர்வதற்கு நாம் ஊக்குவித்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 100 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக த ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.