மேம்படுத்தப்பட்ட ஒழுங்குபடுத்தல் ஆகக்குறைந்த மூலதன இருப்பை கொண்டிருக்கும் தேவைப்பாட்டை பூர்த்தி செய்யும் வகையில் அமானா வங்கி முன்னெடுத்திருந்த உரிமை வழங்கல், வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் வியாபார செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு முன்னரான வைபவ ரீதியான ஆரம்ப மணி ஒலிக்கச் செய்து வழங்கப்பட்ட உரிமைப் பங்குகளை பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பரலி, முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர், சிரேஷ்ட பணிப்பாளர் தில்ஷான் ஹெட்டியாரச்சி, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க, பிரதம ஒழுங்குபடுத்தல் அதிகாரி ரேணுகே விஜயவர்தன, பட்டியலிடல் பிரிவின் உப தலைவர் கனிஷ்கா முனசிங்க ஆகியோருடன் வங்கியினதும் பங்குப்பரிவர்த்தனையினதும் நிர்வாகப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் உரிமை வழங்கல்களில் ஒன்றாக இது அமைந்திருந்ததுடன், அமானா வங்கியின் ஏற்கனவே காணப்படும் பங்குதாரர்கள், வெளிநாட்டு, கூட்டாண்மை மற்றும் HNW முதலீட்டாளர்கள் அடங்கலாக புதிய பங்குதாரர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் ரூ. 6 பில்லியனை அமானா வங்கி திரட்டியிருந்தது.
கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் வைபவ ரீதியான ஆரம்ப மணி ஒலிப்பு நிகழ்வில் கூடியிருந்தவர்கள் மத்தியில் பங்குப்பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கிக்கு மற்றுமொரு மூலதன திரட்டல் வாய்ப்பை மேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மேலும் மூலதனத்தை திரட்டிக் கொள்வதற்காக மீண்டும் சந்தைக்கு வருவதை காண்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். ரூ. 6 பில்லியன் பெறுமதியான உரிமைப் பங்கு வழங்கலானது, அமானா வங்கியின் மீது பங்குதாரர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இந்த பங்கு வெளியீடு அமைந்திருந்தது. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டிருக்க வேண்டிய இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.” என்றார்.
அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில், “எமது இந்தப் பயணத்தில் அங்கம் பெற்றுள்ள உங்கள் அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறிப்பாக, எமது மாபெரும் மற்றும் புதிய பங்குதாரர்கள், IsDB குழுமம், செந்தில்வேல் ஹோல்டிங்ஸ், ஒமார் மற்றும் காசிம் குடும்பங்களுக்கு நன்றிகள் உரித்தாகும். உங்களின் நம்பிக்கை, எம்மை சிறப்பு மற்றும் புத்தாக்கத்தை நோக்கிச் செல்ல ஊக்குவிக்கின்றன. ஒன்றிணைந்து, எமது பங்காளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் தேசத்தின் வளர்ச்சி மற்றும் சுபீட்சத்துக்கு பங்களிப்பு வழங்கும் அமானா வங்கியை உறுதியாக கட்டியெழுப்புவதற்கு நாம் ஒன்றிணைந்து செயலாற்றுவோம். இந்தப் பங்கு வழங்கலினூடாக திரட்டப்பட்ட நிதி, எமது தந்திரோபாய செயற்பாடுகளுக்கு, எமது விரிவாக்கல் செயற்பாடுகளுக்கு மற்றும் எமது பங்குதாரர்களுக்கு நிலைபேறான பெறுமதி உருவாக்க செயற்பாடுகளுக்கு வலுவூட்ட அத்தியாவசியமானதாக அமைந்திருக்கும்.” என்றார்.
நிகழ்வில் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “உரிமை வழங்கலை நாம் வைபவ ரீதியாக பூர்த்தி செய்யும் நிலையில், பங்குதாரர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும், ஒழுங்குபடுத்துநர்களின் வழிகாட்டல்களுக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். வங்கியின் மீது எமது பெறுமதி வாய்ந்த முதலீட்டாளர்கள் நம்பிக்கையை கொண்டுள்ள நிலையில், அந்த நம்பிக்கையை பேணி, பங்குதாரர்களுக்கு மேம்மபடுத்தப்பட்ட பெறுமதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பு தற்போது எம்மிடம் காணப்படுகின்றது.” என்றார்.
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை பற்றி
இலங்கையின் ஒரே பங்குப் பரிவர்த்தனையை கொழும்பு பங்குப்பரிவர்த்தனை செயற்படுத்துவதுடன், நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வெளிப்படையான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பையும் கொண்டுள்ளது. இலங்கையின் சட்ட விதிமுறைகளுக்கமைய உத்தரவாதமளிக்கப்பட்ட வரையறுக்கபட்பட்ட நிறுவனமாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை திகழ்கின்றது. இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் அங்கிகாரம் பெற்றுள்ளதுடன், 15 அங்கத்தவர்கள் மற்றும் 13 வியாபார அங்கத்தவர்களைக் கொண்ட பரஸ்பர பரிமாற்றகமாகவும் அமைந்துள்ளது. பங்குமுகவர்களாக இயங்குவதற்கு இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் அனுமதியை சகல அங்கத்தவர்களும் வியாபார அங்கத்தவர்களும் பெற்றுள்ளனர். மேலதிக தகவல்களுக்கு www.cse.lk எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
அமானா வங்கி பற்றி
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2023 ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட தேசிய நீண்ட கால தரப்படுத்தலில் BB+(lka) எனும் உறுதியான தோற்றத்தை வழங்கியிருந்தது.
வைபவத்தில் பங்கேற்றிருந்தவர்கள் (இடமிருந்து), அமானா வங்கி பிஎல்சியின் சிரேஷ்ட பணிப்பாளர் தில்ஷான் ஹெட்டியாரச்சி, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பிரதம ஒழுங்குபடுத்தல் அதிகாரி ரேணுகே விஜயவர்தன, அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர், கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க, அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பரலி, அமானா வங்கியின் பங்குதாரர் கலாநிதி. ரி.செந்தில்வேல், அமானா வங்கியின் பங்குதாரர் அஸ்லம் ஒமார், அமானா வங்கியின் பங்குதாரர் நந்தனன் செந்தில்வேல் மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பட்டியலிடல் பிரிவில் உப தலைவர் கனிஷ்கா முனசிங்க ஆகியோர் காணப்படுகின்றனர்.