அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை கட்டியெழுப்பும் வகையில், அறிவு, அனுபவங்கள் மற்றும் உள்ளார்ந்த அம்சங்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், UTO EduConsult இனால் ஏற்பாடு செய்யப்படும் EntreMindz பருவம் 3க்கான அனுசரணையை வழங்க அமானா வங்கி மீண்டும் முன்வந்திருந்தது. இந்த அனுசரணையினூடாக, பொருளாதார வளர்ச்சியை தூண்டும் இளம் வயது முதல் தொழில்முனைவோரின் ஆற்றலை ஊக்குவிப்பது மற்றும் புத்தாக்கமான ஸ்தாபிப்புகளுக்கு ஆதரவளிப்பது போன்றவற்றுக்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்திருந்தது.
Gen Z தலைமுறையினரின் தொழில்முனைவோர் மனநிலையை திறக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட EntreMinds season 3 இல், 15 மற்றும் 20 வயதுக்குட்பட்ட 35 அணிகள் பங்கேற்று, தமது பிரத்தியேகமான வியாபாரத் கருத்திட்டங்களை நிபுணத்துவ நடுவர் குழுவினர் முன்னிலையில் முன்வைத்திருந்தனர். இதில் சன்ன குணவர்தன (பிரதம நிறைவேற்று அதிகாரி – தங்கொட்டுவ போர்சலேன்), அஜித் கதிர்காமர் (சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் தலைமை அதிகாரி - Aqcellar), சித்தீக் அக்பர் (உப தலைவர் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் - அமானா வங்கி), அப்துல் கரீம் (பிரதம நிறைவேற்று அதிகாரி - Inotrend International), இஷ்ரத் ரவுப் (முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி - Adl Capital) மற்றும் ஷரிகா முபாரக் (இணை ஸ்தாபகர் மற்றும் தலைவர் - Aqcellar South East Asia) ஆகியோர் அடங்கியிருந்தனர்.
ஆரம்ப போட்டி விளக்கமளிப்பின் போது, புகழ்பெற்ற தொழில்முனைவரும், ஐக்கிய அமெரிக்காவின் முதலீட்டாளருமான ஆரென் கொல்பின் பிரதான உரையை ஆற்றியிருந்தார். புகழ்பெற்ற தொழில்முனைவரும், பெண் தொழில்முனைவருமான நயோமி ஹந்துன்னெத்தியும், தமது கருத்துக்களை, மெய்நிகரான முறையில் பங்கேற்றிருந்த சுமார் 200 பேர் மத்தியில் பகிர்ந்திருந்தார். அனுபவம் வாய்ந்த நடுவர் குழுவினருக்கு மேலதிகமாக, தமது நிபுணத்துவம் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்து கொண்ட அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோரில், AICPA & CIMA இலங்கை மற்றும் மாலைதீவுகளின் முகாமையாளர் சஹாரா அன்சாரி, Stache Brunch & Bistro ஸ்தாபகர் தாஷியா டி சில்வா, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மூலோபாய வடிவமைப்பாளர் அர்ஷாத் மொஹைதீன், EMZ 2022 இன் சிறந்த வெளிப்படுத்துனராக தெரிவு செய்யப்பட்ட அக்லாக் கசாலி ஆகியோரும் அடங்கியிருந்தனர்.
இந்த பங்காண்மை தொடர்பில் அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் சித்தீக் அக்பர் குறிப்பிடுகையில், “அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோரிடமிருந்து அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு மேலான நிகழ்வாக இது அமைந்திருந்தது. அடுத்த தலைமுறை வியாபார தலைவர்களை ஊக்குவித்து மேம்படுத்துவதற்கான அடித்தளத்தையும் ஏற்படுத்தியிருந்தது. வளர்ந்து வரும் தொழில்முனைவோரை ஊக்குவித்தல் மற்றும் உதவியளித்தலில் அமானா வங்கி தொடர்ச்சியாக முன்னிலையில் திகழ்வதுடன், EntreMindz உடனான கைகோர்ப்பு என்பது, இளம் தூர சிந்தனைகளைக் கொண்ட வியாபாரத் தலைவர்களுக்கு வலுவூட்டுவதற்கான தமது அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 100 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக த ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.
படம் - சித்தீக் அக்பர்
உப தலைவர் – நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் அமானா வங்கி